திண்டிவனம், டிச. 15: திண்டிவனம் ரோசணை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அண்ணா பொறியியல் கல்லூரி எதிரே பைக்கில் சென்ற வாலிபர்களை வழிமறித்து கத்திமுனையில் மிரட்டி பணம், செல்போன், பைக் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்ற 2 ேபரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். செஞ்சி அவலூர்பேட்டை அடுத்த கொரட்டுக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சேகர் மகன் சம்பத் (22), இவரும் தாயனூர்தோப்பு கிராமத்தை சேர்ந்த கார்த்தி(21), ஞானசேகர்(25), சிவா(19) ஆகியோரும் நண்பர்களாவர். இவர்கள் 4 பேரும் வீட்டிலிருந்து டிசம்பர் 3ம் தேதி அதிகாலையில் கட்டிட வேலை செய்வதற்காக சென்னைக்கு இரண்டு பைக்கில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது கல்லூரி சாலை அண்ணா பொறியியல் கல்லூரி அருகே சென்று கொண்டிருந்தபோது பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள் 4 பேரையும் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வழிமறித்து பைக், செல்போன், பணம் ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில் ரோசணை போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். மேலும் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுங்க சாவடியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.இந்நிலையில் நேற்று கல்லூரி சாலையில் உதவி ஆய்வாளர் வினோத் ராஜ் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, அவ்வழியாக பைக்கில் வந்த 2 நபர்கள் போலீசாரை கண்டவுடன் பைக்கை திருப்பி தப்பிச் செல்ல முயன்றபோது கீழே விழுந்தனர். இதில் ஒருவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இருவரையும் சுற்றி வளைத்துப் பிடித்த போலீசார் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்தனர்.விசாரணையில் எலவாசனூர் பேட்டை அடுத்த சிஏ மங்கம் கிராமத்தை சேர்ந்த முருகானந்தம் மகன் புகழ்வாணன்(23), மற்றும் ஒரகடம் அடுத்த நாவலூர் பகுதியை சேர்ந்த ஐயப்பன் மகன் பார்த்திபன்(21) என்பதும், அண்ணா பொறியியல் கல்லூரி எதிரே 4 பேரை மடக்கி பைக், செல்போன், பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றதையும், அய்யன்தோப்பு, சந்தைமேடு ஆகிய பகுதிகளில் பெண்களிடம் தாலி செயின் பறித்து சென்றதையும் ஒப்புக்கொண்டனர். அவர்களிடமிருந்து 10 பவுன் தாலி சரடு, பைக், செல்போன், கத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார், இடது காலில் முறிவு ஏற்பட்ட புகழ்வாணனுக்கு அரசு மருத்துவமனையில் மாவுக்கட்டு போடப்பட்டு, இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
from Dinakaran.com |15 Dec 2021 https://ift.tt/3oTgtbR
0 Comments