விருத்தாசலம், டிச. 10: கணவனை அடித்து கான்று நெஞ்சுவலியால் இறந்ததாக நாடகமாடிய மனைவி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த செம்பளாக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் மணி மகன் சந்திரன் (41). இவரது மனைவி செல்வகுமாரி (36). இவர்களுக்கு நிஷாந்த், நித்யா என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். மூட்டை தூக்கும் தொழிலாளியான சந்திரன் தனது குடும்பத்தினருடன் விருத்தாசலம் மேட்டுக்காலனி பகுதியில் வசித்து வந்தார். சந்திரனுக்கும் அவரது மனைவி செல்வகுமாரிக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று இரவு 8 மணியளவில் சந்திரன் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது சந்திரனுக்கும் அவரது மனைவி செல்வகுமாரிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் செல்வகுமாரி, அவரது மகன் நிஷாந்த், செல்வகுமாரியின் அக்கா மகன் மணிகண்டன் ஆகிய மூன்று பேரும் சேர்ந்து சந்திரனை திட்டி தாக்கியுள்ளனர். இதில் சந்திரன் மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து சந்திரனை அவரது மனைவி விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதால் சந்திரன் மயங்கி விழுந்ததாக கூறியுள்ளார். இதையடுத்து சந்திரனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். உடனடியாக அங்கிருந்து சந்திரனின் உடலை செம்பளாக்குறிச்சி கிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு சென்றனர். அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் உயிரிழந்ததாக பொதுமக்களிடம் கூறி நாடகமாடியுள்ளனர். இந்நிலையில் சந்திரனின் தலையில் காயம் இருப்பதை பார்த்து சந்தேகமடைந்த சந்திரனின் தாயார் கொளஞ்சி, சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி விருத்தாசலம் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து இன்ஸ்பெக்டர் விஜயரங்கன், சப்-இன்ஸ்பெக்டர் கமலஹாசன் மற்றும் போலீசார் மேற்கொண்ட தொடர் விசாரணையில் சந்திரன் தலையில் காயம் இருந்தது உறுதியானது. இதையடுத்து போலீசார் சந்திரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் செல்வகுமாரி உள்ளிட்ட மூவரும் சேர்ந்து தாக்கியதில் சந்திரன் உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து சந்திரன் சாவுக்கு காரணமான அவரது மனைவி செல்வகுமாரி (36), மகன் நிஷாந்த் (18), செல்வகுமாரியின் அக்காள் மகன் மணிகண்டன் (20) ஆகிய 3 பேர் மீது விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
from Dinakaran.com |10 Dec 2021 https://ift.tt/3DJ5Tsh
0 Comments