பண்ருட்டி, டிச. 11: பண்ருட்டி அருகே எனதிரிமங்கலம் கிராமத்தில் தென்பெண்ணையாறு செல்கிறது. இந்த ஆற்றில் கடந்த சிலவாரங்களாகவே எப்போதும் இல்லாத அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருந்தது. தற்போது வெயில் காரணமாக தண்ணீர் வடிய துவங்கியது. இந்த சூழ்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு இந்த ஆற்று பகுதியில் சுடுமண் பொம்மை, புகைபிடிப்பான், வட்டசில் கிடைத்தன. இதனை தொடர்ந்து அதே பகுதியில் தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல் மற்றும் வரலாற்று ஆர்வலர்களான அதே பகுதியை சேர்ந்த மோகன் ரவீந்தர், சுந்தர் ஆகியோர் ஆற்றின் மேற்பரப்பில் கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சங்க காலத்தை சேர்ந்த சுடுமண் குடிநீர் குழாயை கண்டிபிடித்தனர். இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல் கூறியதாவது, ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பெரிய அளவில் மண் அரிப்பு ஏற்பட்டது. ஆற்றின் கரை பகுதிகளில் வித்தியாசமான பாணை ஓடைகள் தென்பட்டன. எனதிரிமங்கலம் ஆற்று பகுதியில் சுடுமண்ணால் ஆன குடிநீர் குழாயை ஆற்றின் மேற்பரப்பில் இருப்பதை ஆய்வில் கண்டுபிடித்தோம். இந்த சுடுமண் குழாயின் நீளம் 30 செ.மீ, விட்டம் 17 செ.மீ. மொத்தம் 4 அடி நீளத்தில் ஒவ்வொன்றும் விரிசல் விட்டு காணப்படுகிறது. மீத பகுதிகள் ஆற்றின் வெள்ளப்பெருக்கினால் சிதைந்துள்ளன. இந்த சுடுமண் குழாய்கள் சொருகு முறையை கொண்டதாக உள்ளது. இதனை மக்கள் குடிநீர் குழாயாக பயன்படுத்தி உள்ளனர். நிலத்தின் அடியில் நீண்ட யானையின் துதிக்கை போல் உள்ள குழாய்கள் அமைத்து இருந்ததாக பரிபாடல் குறிப்பிடுகிறது. இலக்கியங்களுக்கு வலு சேர்க்கும் வகையில் சுடுமண் குழாய்கள் கீழடி, அரிக்கைமேடு, அழகன்குளம் போன்ற பகுதிகளிலும் தமிழக அரசு மேற்கொண்ட அகழாய்வில் கிடைத்துள்ளன. பழந்தமிழ் நீர் செல்லும் குழாயில் ஒரு முனையை குறுகலாகவும், மறுமுனையை அகலமாகவும் வடிவமைத்து குழாய்களை ஒன்றுக்கு ஒன்று பொருத்தி உள்ளனர். இவ்வாறு மேம்பட்ட குடிநீர் குழாய்கள் இருந்ததற்காக தொல்லியல் சான்றுகள் மற்றும் சங்க இலக்கியங்கள் வெறும் புனைவுகள் மட்டுமின்றி வரலாற்று சான்றுகளாகவே உள்ளது என தெளிவாக தெரிகிறது. எனதிரிமங்கலம் பகுதியில் இதுவரை கிடைத்துள்ள தொல்பொருட்கள் உரைகிணறுகள், சுடுமண் குழாய்கள் ஆகியவற்றை பார்க்கும்போது சங்ககால மக்கள் இப்பகுதியில் அதிகமாக வாழ்ந்துள்ளனர் என்பதை அறியமுடிகிறது என கூறினார்.
from Dinakaran.com |11 Dec 2021 https://ift.tt/3IxDo4m
0 Comments