சின்னசேலம், டிச. 6: சின்னசேலம் அருகே மக்காச்சோள வயலில் வாலிபர் சடலம் கிடந்ததையொட்டி அடித்து கொலை செய்யப்பட்டிருக்கலாமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சின்னசேலம் அருகே கீழ்குப்பம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் கோவிந்தன் (32). இவரது மனைவி புவனேஸ்வரி. இவர்களுக்கு மோனிஷா என்ற 3 வயது பெண் குழந்தை உள்ளது. கோவிந்தன் கடந்த 5 ஆண்டுகளாக டிரைவர் வேலை செய்து வந்தார். தற்போது கொரோனா பிரச்னையால் வீட்டில் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை நடந்த காய்கறி சந்தையில், அப்பகுதி மக்கள் பலர் கோவிந்தனை பார்த்துள்ளனர். ஆனால் அன்றிரவு கோவிந்தன் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது மனைவி புவனேஸ்வரி பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில் நேற்று காலை கீழ்குப்பம் ஆற்றங்கரையோரம் முனியப்பர் கோயிலுக்கு அருகில் ராமச்சந்திரன் என்பவரது மக்காச்சோள வயலில் கோவிந்தன் இறந்த நிலையில் சடலமாக கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த அப்பகுதி மக்கள் சம்பவ இடத்தில் திரண்டனர். தகவலின் பேரில் சின்னசேலம் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் நந்தகோபால், சுப்பிரமணியன், கோவிந்தராஜ் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து முதல்கட்ட விசாரணை நடத்தினர். பின்னர் சடலத்தை ஆம்புலன்சில் ஏற்றி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கீழ்குப்பம் போலீசார் வழக்குப்பதிந்து வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
from Dinakaran.com |06 Dec 2021 https://ift.tt/3IqL4FM
0 Comments