
உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் இந்திய வீராங்கனைகள் நிது கங்காஸ் மற்றும் சாவீட்டி பூரா இருவரும் தங்கம் வென்று நாட்டுக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.
உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் இந்திய வீராங்கனை நிது கங்காஸ், 48 கிலோ எடைப்பிரிவில் தங்கம் வென்று அசத்தினார். அதனையடுத்து 81 கிலோ எடைப்பிரிவில் மற்றொரு தங்கத்தை பெற்று இரண்டாவது தங்கத்தை இந்தியாவிற்கு தேடிக்கொடுத்துள்ளார் சாவீட்டி பூரா. டெல்லியில் நடைபெற்றுவரும் உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில், 48 கிலோ எடைப்பிரிவு இறுதிப் போட்டியில், இந்திய வீராங்கனை நிது கங்காஸ், மங்கோலியாவின் லுஸ்டைகானுடன் மோதினார்.

விறுவிறுப்பாக தொடங்கப்பட்ட இந்த இறுதிப்போட்டியில் முதல் சுற்றில் லுஸ்டைகான் முகத்தில் சரமாரியாகக் தாக்குதலை நடத்திய நிது கங்காஸ், 5-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றார். இந்நிலையில் இரண்டாவது சுற்றில் சிறப்பான எதிர் தாக்குதலை லுஸ்டைகான் வெளிக்காட்டிய நிலையில் சற்று தடுமாறியபோதும், நிது கங்காஸின் முன்னிலை 3-2 என்ற கணக்கில் நீடித்தது. இதனைத்தொடர்ந்து மூன்றாவது சுற்றில் ஆக்ரோஷம் காட்டிய நிது கங்காஸ், லுஸ்டைகானை தனது குத்துகளால் திணறடித்தார். இறுதியாக 5-0 என்ற கணக்கில் நிது கங்காஸ் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் உலக சாம்பியன்ஷிப் குத்துச்சண்டையில் தங்கம் வென்ற 6-ஆவது இந்தியர் என்ற பெருமையை அடைந்துள்ளார் நிது கங்காஸ்.

இதனையடுத்து 81 கிலோ எடைப் பிரிவில் மற்றொரு இறுதிபோட்டிக்கு முன்னேறிய இந்திய வீராங்கனை சாவீட்டி பூரா, சீனா வீராங்கனை லினா வங்கை எதிர்கொண்டு விளையாடினார். இந்த போட்டியானது இரண்டு வீராங்கனைகளுக்கும் இடையே ஆக்ரோஷமாக நடைபெற்றது. விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் கடைசி வரை விட்டுக்கொடுக்காத லினா வங்கிடம் இருந்து 4-3 என ஒருபுள்ளி வித்தியாசத்தில் தங்கத்தை தட்டிச்சென்றார் சாவீட்டி பூரா.

தங்கம் வென்று நாட்டுக்குப் பெருமை சேர்த்துள்ள நிது கங்காஸ் மற்றும் சாவீட்டி பூரா இருவருக்கும் பாராட்டுகள் குவிந்துவருகின்றன. மேலும் இன்னும் இரண்டு இந்திய வீராங்கனைகளான நிகாத் ஜரீன் மற்றும் லவ்லினா போர்கோஹைன் இருவரும் நாளை இறுதிப் போட்டியில் விளையாடவிருக்கின்றனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/eZIAjxl
0 Comments